‘வ’ கரக் கவிகள்

சிவசித்தரே!
வசித்து வம்தேடி வம்சம் முழுதும்
வச்சிர மாய்வக்கு தேடின் – கிட்டாதே
வயனம் வயக்கும் சிவகுரு உணர்த்த
வல்லபம் கூடி வென்றோம் வசித்துவத்தை
– சித்திகள் அறிய பரம்பரையாய்த் தேடினும் அடைய முடியாதே.. வேதமாம் வாசிதனை ஒளியாய் சிவசித்தர் உணர்த்த .. நாங்கள் – வசித்துவம் என்னும் சித்தியை விட உண்மை உணர்வுகளே வாழ்வியல் கூறுகள் என்பதை உணர்ந்தோமே..

சிவசித்தரே!
வாணாள் கூட்டிய சிவசித்தரே வாரிதியாய்
வாள் போல் வார்த்தீரே – எம்மை
வாசுகி யாய் தாங்கினீரே வாசியால்
வாகு பெற்றோம் வாக்கால்
-எங்கள் ஆயுட்காலத்தை வாசியால் கடல் போல கூட்டிய சிவசித்தரே எங்கள் புத்தியை உருக்கி கூர்மையான ஒரு உருவாய் எங்களை மாற்றினீரே: பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் வாசுகியைப் போல எங்களைத் தாங்குகிறீரே: அழகு பெற்றோம் உம் சொல் காக்கும் தன்மையால்..

sivssiththan 2  (21)சிவசித்தரே!
விஸ்வரூ பமாய் வாசி விஞ்சியது
விஞ்சை விறல் கொண்டோம் – விகசினோம்
வியம் எனும் விக்ரமம் கண்டு
விடிவு பெற்றோம் சிவகுருவே..
– அண்டம் முழுதும் விரிந்து நிறைந்த இறையாய் வாசியானது விஞ்சுகிறது அறிவியலை, வெற்றி கொண்டு மலர்கிறோம்: புலனிறியும் திறன் பெற்று, துன்பம் நீங்கி இன்பம் வந்தது சிவகுருவால்

சிவசித்தரே!
வீணன் கள்என்றும் வீறுபெறு வாரோ
வீம்பு கொள்வோன் வீடுபேறு – அடைவரோ
வீசம் வேலைசெய் யுமே வாசியால்
வீரியம் அறியவைப்பார் சிவசித்தரே
– பயனற்றவர்கள் என்றேனும் மேம்படுவாரோ பிடிவாதம் பிடிப்போர் முக்தி பெறுவாரோ அவர்களின் மூளைதான் வேலை செய்யுமோ சுக்கிலனின் சேமிப்பை அறிய வைப்பார் சிவகுருவே..

சிவசித்தரே!
உவர்மண் நாங்கள் உவமம் ஆனோம்
உவர்த்தி யாளன் சிவசித்தரால் – வில்வமாய்
உவட்டு உவகை உள்ளம் நிரைக்கும்
உவ்விடம் உவமனா னதே
– விளைவிக்கவே முடியாத நிலமான நாங்கள், கற்பிப்பவர் உங்களால் வில்வமாய் உவமை கூறப்படுகின்றோம், மிகுந்த மகிழ்ச்சியால் எங்கள் உள்ளம் நிறைக்க, உடலின் இரு நாசிகளுக்கு நடுவில் உள்ள புருவமையம் அமைதியுற்றதே.

சிவசித்தரே!
ஊர்வன உணரும் வாழ்கை முறை
ஊர்வலம் ஊரும் ஊமையர் – உணரார்
ஊர்வன உண்ணும் உறங்கும் நேரத்தில்
ஊர்வலம் செல்வோர் தவற்வரே
– ஊர்வன இனத்தை சார்ந்த மிருகங்கள் தங்கள் வாழ்கை முறையை உணர்ந்து, உரிய நேரத்தில் உரியதைச் செய்து வாழ்கின்றனர். ஆனால் எதற்கெடுத்தாலும் கூட்டம் போடும் மக்கள் தங்கள் செய்கைகளைச் சரிவரச் செய்யத் தயங்குகின்றனரே.