‘ம’கரக் கவிகள்

சிவசித்தரே!
மகப்பேறு மகிழும் மகடூஉ மட்டுமே
மகிழ்நன் னிடமே மண்ணியலும் – மகியுமேயென
மந்தணம் கூறி மகாத்மியம் மகரந்தமாம்
மங்கைபாகனாய் வீசும் மந்தாநிலமே
– பிள்ளைப்பேரு மட்டுமே பெருவிருப்பம் என கணவனிடம் எதிர்பார்க்கும் பெண்டிற்கு, நம் உடல் நிலத்தின் தன்மை ஒத்த பூமி போன்றது என்று ஆலோசனை கூறி, அதற்குத் தேவையான சிறப்பான பொருள் வெங்காயாமே என்று உணர்த்தி (சிவபிரானாய் நின்று உண்மையைத் தென்றலாய் உணர்த்திய சிவகுருவே, உமக்கு நன்றி)sivssiththan 2  (14)

சிவசித்தரே!
மாசற்றார் மாகாத் மியம் மாகத்தாரே
மாயாசால மல்லவாசி மாந்து – மாணாக்கர்
மாட்டுவோரும் மால்நீங்க மாழ்குநீங்க மாடமே
மா மாடமேமா உணர்த்தியவா.
– தூயமனமுடையவர் மகிமைபெற்ற தேவராவரே.. வித்தையல்ல வாசி, அது அனுபவிக்க வேண்டிய கலை என்று மாணவர்களுக்கும், பரயோகிகளுக்கும், குழப்பம் நீக்கி, கோவில்களின் பெருமையும் வாசியே.. கோவில் கொண்ட துகளும் வாசியே என்று உணர்த்திய சிவசித்தருக்கு நன்றி..

சிவசித்தரே!
மிகுதி தருமே மிரட்சியது மிடியாய்
மிடறு மிக்கவை மிச்சிரமாய் – மிசை
மித்தா ரனாய் சிவசித்தன் (ர்) மிக்காராய்
மிக்கபெயலாம் வாசிவிரட்டும் மிரட்சி..
– மரணம் தரும் அச்சம் கலந்த குழப்பம் அது தொண்டையை தீயவைச் சூழச்செய்து வானம் அடைய முடியாமல் திணரச் செய்யும் போது நண்பனாய் சிவசித்தர், தன் ஞானக்கல்வியால் பெருமழையாம் வாசி கொண்டு விரட்டினீரே பயத்தை..

சிவசித்தரே!
மீக்கூர் நோயினின்று மீள் செய்து
மீண்டும் மீகன் வாசியால் – மீக்கோள்
மீளிமை கூட்டி வாசியேற்றி மீட்சி
மீமாஞ்சை யால்கூறிய வா
– அதிகமான நோயிலிருந்து எங்களை மீளச்செய்து மறுபடியும் மேலேற்றினீர் வாசியால், வலிமை கூட்டினீரே.. நோயிலிருந்து விடுபட்டு வாசியால் உயர மஹாவேதமும் அருளிய உமக்கு நன்றி.

சிவசித்தரே!
முசிப்பு முகாந்திரம் தேடு அதுஉணவே
முக்குற்றம் முகத்துதி நீக்கி – சிவசித்தர்
முகம்நோக்கு முக்காலம் மு(உ)ணர்த்தும் முகுளம்
முக்கண்ணனை முக்கியமாய் காணலாம்
– களைப்புக்குக் காரணம் தேடினால் அது உணவு தான் என்று அறிய முடியும்… காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்று குற்றங்களையும் நீக்கி, முகஸ்துதி செய்வதையும் நிறுத்தி சிவசித்தரை நோக்கினால், முக்காலத்தையும் உணர்த்தும் தாமரையைப்போல் உனக்கு சிவபிரானை அவருள் காட்டுவார்.

சிவசித்தரே!
மூச்சுப்பிடிப்பு கொண்டு மூச்சு மூட்டும்
மூச்சுவிட முடியாமல் மூத்திரக்கல்லால் – மூர்த்தி
மூரி இழந்தும் மூலப்பொருளால் மூதறிவு மூள்
மூவா மருந்து அளித்தீரே வாசியால்
– சுவாசநோயால் அவதியுற்றாலும் சுவாசம் கட்டுப்பட்டு போனாலும், சிறுநீரகக்கல்லால் சுவாசம் தடைபட்டாலும், உடலானது வலிமை இழந்து போனாலும், கடவுளாய் இருந்து பேரறிவு எனும் தீயைத் தந்து மூப்பையும், இறப்பையும் தடுக்கும் மருந்தாம் வாசியை அளித்தீரே..