‘ழ’ கரக் கவிகள்

சிவசித்தரே!
அழிபடர் அழிதன் மாலை அதுதரும்
அழலை அழுத்தி அளிக்கும் – சிவகுருவே
அழைத்து எம்மை அழுக்காறு அழித்து
அழல் கூட்டினீர் வாசியால்
– மிகப்பெரிய துன்பம் வந்து நாங்கள் அழியும் தன்மை அடைந்தபோது களைப்புற்ற எங்கள் உடல் மற்றும் உள்ளத்தின் தீயவற்றை நசுக்கும் சிவசித்தரே.. எங்கள் பொறாமை குணம் அகற்றி எங்களை பிரகாசிக்கச் செய்தீரே..

சிவசித்தரே!
ஆழ்ந்த சிந்தனை ஆழ்த்தும் நேரம்
ஆழும் பாழுமாய் அழிதாக்கும் – மனம்
ஆழித்தீ மாற்றாது ஆழிமால் வரைதாண்டும்
ஆழ்அது வாசியால் ஒன்றுமே
– மனித மனம் எல்லா நேரத்திலும் தேவையற்றவைகளைச் சிந்தித்து, அதனுள் மூழ்கி, நேரத்தியும் கெடுத்து, மனதையும் கெடுக்கிறது. பெருந்தீயினால் உலகமே அழிந்தாலும், சக்கரவாளகிரி எனும் உலகைச் சுற்றியுள்ள கற்பனை மலைகள் சிதறினாலும் கூட அந்த அளவு கற்பனை மலைகள் சிதறினாலும் கூட அந்த அளவு வீரியமுள்ள சிதறல்கள் கூட வாசியால் ஒன்றிடுமே..

சிவசித்தரே!
இழவூழ் தன்னை இழக்கா மானுடர்
இழிசொல் பேசினும் தன்பால் – சிவகுரு
இழுப்பாரே இழைத்தாரே எம்மை இழும்போல்
இழையோ டினோமே இழைபு
– கெடுதியைத் தரும் விதியைத் தவறவிடாத மனிதர்கள் குற்றமுள்ள சொற்களைப்பேசி பிறர் மனதை நோகடிப்போரைக் கூட சிவசித்தர் தன்னை நோக்கி இழுத்து எங்கள் அனைவரையும் நூல் – நூற்பது போல மெலிதாகக் கழிவுகள் வெளியேற்றி, கவி எழுதவும் ஆசிர்வதித்தாரே.

சிவசித்தரே!
ஈழம் குடித்து ஈறுகள் வீங்கிட
ஈழம் தன்னை ஈறுசெய்ய – வாரீர்
ஈழம் தன்னை மறக்கச் செய்தும்
ஈழம் காட்டுவீரே அவருள்
– கள் குடித்து உடல் முழுதும் கெட்டுப்போனதால், கள் முடிப்பதை நிறுத்தச் செய்ய சிவசித்தர் அவர்களைத் தேடி வந்தால், அதனை மறக்கச் செய்து உங்களைப் பொன்னாய் மாற்றிடுவாரே..

சிவசித்தரே!
உழல் மனம் உழற்றும் எம்மை
உழுமண் வாசியை கொண்டு – சிவசித்தர்
உழிதால் அகற்றி உழுது உழுநர் போல்
உழுவலன்பு ஊட்டி னாரே
– அலையும் மனம் கொண்டு பிதற்றும் எங்களை அழுக்கெடுக்கும் –மண் போன்ற இயற்கையாம் வாசியின் துணை கொண்டு சிவசித்தர் அந்த சுழற்சியை அகற்றி ஒரு உழவர் போல் நிலமாகிய எங்களைக் காப்பாற்றி ஏழுபிறப்புகளிலும் மாறாத ஒரு அன்பினை ஊட்டினீரே..

சிவசித்தரே!
ஊழ்த்தல் உண்டும் ஊழ்வினை கொண்டும்
ஊழல் உண்ட உடம்பு – கொண்டு
ஊழ்தொ லைக்க சிவகுரு தேடியே
ஊழ்கு உணர்ந்து உயர்ந்தோமே
– மாமிசம் உண்பதாலும், முற்பிறவியின் பாவங்களாலும், மனமும் உடலும் கெட்டதால், எங்கு போய் பாவங்களைத் தொலைப்பது என்று புரியாமல் சிவசித்தரை நாடினோம். அவருடைய தியானத்தின் மூலம் எங்களை உண்மை உணர வைத்து உயர்த்தினாரே..