‘ப’-கரக் கவிகள்

சிவசித்தரே!
பட்டறிவால் பகிங்கரமாய் பகுத்தறிவு பூட்டி
பக்கணமும் பகட்டும் பக்கவாதத்தின் – படிவமே
பகாப்பதம் பரப்பும் பகவானே பஞ்சகம்
பக்குமே வாசியால் பகலவனே..
– அனுபவ அறிவால் வெளிப்படையாய் விவேகம் கூறினீரே.. எண்ணெய்ப் பலகாரமும், ஆடை அபரணமும், ஆடம்பரமும் இட்டுச்செல்லும் கைகால்களின் நிறுத்தத்தை நோக்கி என்பதை உணர்த்தி.. உங்களை மீறி எதுவும் பகுக்க முடியாது என்பதை விளக்கி, எங்களுள் பரவச் செய்த தெய்வீக குணங்கள் நிறைந்தவரே.. திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், துருவம் அனைத்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்து மிச்சத்தைக் கொண்டு ஒருவருடைய நன்னை, தீமை சொல்லுதல் கூட வாசியோகத்தால் நல்லதாய் மாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒளியே சிவசித்தரே!

சிவசித்தரே!
பாகனே நீர்பாணி பார்க்கா பாக்கியம்கூற
பாசன மாய்ப்பாசி பாயுதேவாசி – பாராவாரமாய்
பாவலரை பாலித்தீரே பா பாவுனீரே
பால்வழுவமைதி யில்லா குண்டலினியே.
– பக்குவநிலை உற்றவரே நேரம் காலம் பார்க்காமல் எங்களுக்கு நல்வினை கூறுபவனே (ரே), வெள்ளமாய் ஆன்மாவில் பாய்கிறது வாசி: கடலாகி கவிஞர்களை இணைத்தீரே… குணடலினி யெனும் வித்தையை பாம்பின் வடிவமாய் ஆண் பெண் பேதமில்லாமல் அனைவருள்ளும் ஊன்றுவித்தீரே!!

சிவசித்தரே!
பிம்பத்தின் பிதிர் பித்தமெனும் பித்து
பிடிபடுமே பிடித்தம் நீங்கினால் – பிரசன்னமாகுமே
பிரணவம் பிரதானித்து பிங்கலையே வாசியால்
பிங்கலமே நீர் பிரபந்தனே
– உடலின் விடுகதை கழிவு எனும் அறியாமை புரிந்துகொண்டோமே.. கழிவுகள் நீங்கியதால் முகத்தெளிவு பெற்றோமே. நீர் அருளிய மந்திரத்தால் முக்கியத்துவம் பெற்றது நாடிகளுள் ஒன்றான பிங்கலை.. ஆம்! நீர் கற்பித்த வாசியால்… பொன்நிறமானவரே நீரே கதி என சரணாகதியடைந்தோமே..

சிவசித்தரே!
பீள் கலைவதும் பீனசம் சேர்ந்ததும்
பீதி பிதற்றும் பீடிகை – யே
பீமையால் பீடித் தோமே விரட்டினீரே
பீட்சரத்தால் பீடிகவை ஏற்றினீரே.
– கரு கலைவதையும், சளி பிடிப்பதையும், அச்சமுறுவதையும், துன்புறுவதையும், உடல் பருமனால் துன்பப்படுவதியும் விரட்டினீரே உம் மந்திரத்தால்.. எங்கள் வாழ்க்கைக்குள் ஒரு புதிய வாழ்விற்கு முகவுரை எழுதினீரே.

சிவசித்தரே!
புகர் புகட்டும் புத்தி புலர்வே
புங்கவ ரேபுகல் புந்தி – புலப்படுத்தியவா
புறனடை புசங்கமாம் புகர்முகம் குண்டலினியாம்
புக்கில் புடவியாம் உடம்பே
– உயிர் உட்புகுத்தும் அனுபவமாம் விடியலே, உயர்ந்தவரே – ஆதார அறிவாம் வாசியைத் தெரியப்படுத்தியவரே பொதுவிதிக்கு விலக்கானதைக் கூறும் சூத்திரம் அல்ல வாசி, பாம்பு போன்ற வில்லினை குண்டலினியாக பரபரவென உயர்த்தி அது தங்குமிடம் நிலத்திற்குச் சமமான நம் உடலே என்று உணர்த்தியவரே!

சிவசித்தரே!
பூஞ்சை பூட்கை யால் பூவாக்கி
பூர்வம் பூச்சும் பூதலமல்ல – வாசி
பூசனை யால் பூசித்தால் பூச்சியமே
பூர்த்தி செய்தாய் பூகத்தை
– பலகீனத்தை மனவுறுதியால் தோற்றுவித்து முதன்மையை மறைக்கும் உலகல்ல வாசியே.. ஆராதனை செய்தோம் நின்னை நன்மதிப்பால் நிறைவு செய்தீரே இருளை.

Previous Post
Next Post

One thought on “‘ப’-கரக் கவிகள்

  1. நோய்கள் என்று தீர்வு தெரியாமல் தவித்த எங்களுக்கு கழிவுகள் என்று உணர்த்திய சிவகுருவிற்கு நன்றிகள் பல!

Leave a Reply