‘ர’கர கவிகள்

sivssiththan 2  (22)சிவசித்தரே!
ரச வாதம் செய்வோரா சித்தர்
ரக சியம் காப்போரா – சித்தர்
ரம் மியம் கொண்டோரா சித்தர்
ரகநோய் தீர்ப்பாரே சித்தர் (சிவசித்தரே)
– சாதா உலோகங்களைத் தங்கமாக மாற்றும் வித்தை செய்வோரா சித்தர், தங்கள் செயல்களை மறைத்து பிறர்க்கு பலன் அளிக்காமல் செய்வோரா சித்தர், அமைதியை மட்டுமே தங்களுள் தேடி காடு செல்வோரா சித்தர்.. இல்லை மக்களுடைய எல்லா நோய்களையும் தீர்ப்பவரே உண்மையான சித்தர் அது சிவசித்தர் ஒருவரே.

சிவசித்தரே!
ராசி ரசிக்கும் ரசிகர் தேட
ராகு ராஜா வாய் – வேலைசெய்ய
ராகம் போடுவீர் இன்பமாய் என்றுமே
ராசி மாற்றுவார் சிவசித்தரே
– ஜாதகம் பார்த்து அனைத்து வேலைகளையும் செய்வோரே, உங்கள் ஜாதகத்தில் ராகு உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த நிலையில் இருந்தாலும் சந்தோஷமாய் இருங்கள், ஏனெனில் சிவசித்தரை நம்பினோருக்கு ஜாதகத்தின் வேலை தேவையிராது.

சிவசித்தரே!
ரிஷிகள் ரீங்கார மிடும் காட்டினுள்
ரிஷப வாகனன் தேடி – தவமிருந்து
ரிஷப வாகனன் அவருள் உண்டு
ரிஷி உணரா(ர்) ரே
– காட்டுற்குள் வண்டுகள், பூச்சிகள் சுற்றித்திரியும் இடத்தை அடைந்து, வீட்டை மறந்து தவம் செய்து சிவனாரைக் தேடும் முனிவர்கள் அறியாரே எம்பெருமான் அவருள்ளே தான் இருக்கிறார் என்று.

சிவசித்தரே!
ரீதி யாய் அறிய வாசியெனும்
ரீதி தனை உணர – உணவெனும்
ரீதி யைத் தவற விட்டால்
ரீதி யாய்கிட்டா தேவாசி
– ஒழுக்கம் அறிய வேண்டுமானால் வாசி பழகவேண்டும், அதன் நிலைமை அறிய உணவு எனும் ஒழுக்கம் தவறவிடாமல் இருக்க வேண்டும் அப்படித் தவற விட்டால் கிடைக்காதே வாசி.

சிவசித்தரே!
ருது வாகும் தருணம் பெண்ணறியாள்
ருது இன்று தன்வயதை – மாற்றா
ருசி உணர்ந்தே நடக்கும் இயற்பை
ருசு கூறஏராள முளரே
– முன்பு போல் பெண்கள் பூப்படையும் வயதை யாராலும் கணிக்க முடியவில்லை: சரியான பருவம் என்பதை இக்காலத்தில் இயற்கை கணிப்பதில்லை, அவள் உண்ணும் உணவே கணிக்கிறது.. அதற்கு சான்று கூற லட்சக்கணக்கான பெண்கள் உள்ளரே!

சிவசித்தரே!
ரூபம் அரூப மாகுமே வாசியால்
ரூபம் கூடு மேவாசி – கற்றால்
ரூபம் காணும் உண்மை மறைக்கும்
ரூபாய் எனும் பேயை
– உருவம் என்பது மாயை என்பதை உணர வைக்குமே வாசி, வாசியோகம் கற்றால் அழகு தன்னால் கூடுமே, பணத்தின் மூலம் உருவம் காணும் எண்ணத்தை மறைக்குமே வாசி.

Previous Post
Next Post

Leave a Reply